
உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ !
காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான் !
எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய் ?
நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ !
கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

2 comments:
படித்த என் மனதில் பாதிப்பை நிகழ்த்திய கவிதை ..
அன்பின் சரவணகுமார்,
//படித்த என் மனதில் பாதிப்பை நிகழ்த்திய கவிதை ..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment