
எனதுயிருருக்கும் பாடலைப்
பின்பற்றி வந்த உன் நேசம்
எனக்கென்றிருந்த
ஒரேயொரு கேடயத்தையும்
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்
வருத்தம்தான் எனக்கு..!
ஆதியின் மூலங்களறுத்து,
சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்
நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்
என் நெற்றியில் தொடங்கியுன்
கூராயுதங்கள் கீறுகின்றன,
உயிருருகி வழியும் குருதியில்
தாகம் தணித்துக்கொள்கிறாய்
என் உயிரின் மூலங்களை
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
என் வாழ்வின் தீர்ப்பினை
இவ்வாறு நீயே எழுதுகிறாய் !
சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும் ;
நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !
இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

8 comments:
இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை\\
கடைசி வரிகள் நச்சன்னு இருக்கு
சுயநலமே சுயமான துணையைப் பற்றி அருமையாய்க் கவிதை வடித்திருக்கிறீர்கள். தானே உள்ளிருந்து பார்த்தது போல் உணர்வின் ஆழங்களை உணர்ந்து கதறும் உங்கள் கவிதைகள் எப்போதுமே என்னை அதிசயிக்க வைக்கும்.
//பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !//
ஹும்...
//உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !//
அருமையான முத்தாய்ப்பு.
அன்பின் ஜாக்கி சேகர்,
எனது கவிதைப்பக்கத்திற்கான உங்கள் முதல்வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கவிநயா,
//சுயநலமே சுயமான துணையைப் பற்றி அருமையாய்க் கவிதை வடித்திருக்கிறீர்கள். தானே உள்ளிருந்து பார்த்தது போல் உணர்வின் ஆழங்களை உணர்ந்து கதறும் உங்கள் கவிதைகள் எப்போதுமே என்னை அதிசயிக்க வைக்கும்.//
இதில் அதிசயிக்க ஏதுமில்லை சகோதரி.
நாம் நாளும் சந்திக்கும் நால்வரிலொருவர் இதுபோலச் சுயநலத்தைத்தான் அகத்தினில் சுமந்தலைந்து கொண்டிருப்பார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
சுப்பர்வ்வ்வ் ரிஷான்..
ஒவ்வொரு வரியும் அற்புதமாய் உள்ளன. .
உங்கள் வலிகளை கூட எப்படி இவ்வளவு அழகான வரிகளில் சொல்லுகிறீர்கள்....
/நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் ! /
அழகான வரிகள்
வாழ்த்துக்கள் ரிஷான்
அன்பின் சக்தி,
//அழகான வரிகள்
வாழ்த்துக்கள் ரிஷான் //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்னேகிதி :)
//பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !//
மனது உதிர்ந்த சிறு இறகினைப் போல எடையற்று லேசாகிப் போனது படித்தவுடன்.....
அன்புடன் அருணா
வாங்க அருணா:)
//மனது உதிர்ந்த சிறு இறகினைப் போல எடையற்று லேசாகிப் போனது படித்தவுடன்.....
அன்புடன் அருணா //
உங்கள் கருத்து மனதுக்கு மகிழ்வினைத் தருகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
Post a Comment