உன்னைப் புலம்பும் எனது பாடல் !


அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !

ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !

அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !

அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !

முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !

அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

28 comments:

புதுகைச் சாரல் said...

முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''

இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல

புதுகைச் சாரல் said...

நான்தான் மொதல்ல!

Aruna said...

///அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று ///

என்னப்பா இப்பிடி சோகமா முடிச்சிட்டே???
அன்புடன் அருணா

தமிழ்ப்பறவை said...

'நச்' எனப் பிடித்தவை..
முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !
//
மற்றவை பலமுறை கேட்டவை..//

கவிநயா said...

//அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !//

அழகான வரிகள் ரிஷான்..

//முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !//

காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமன்றி வாழ்க்கையில் தோற்றவர்களுக்கும் பொருந்தும் வரிகள்..

Gokulan said...

உண்மை.. நான் கூட அப்படியொருத்தியைத்தான் நம்பிக்கிடந்தேன், என் முட்டாள்தனம் புரிந்த பின்னும் கூட.. என்ன செய்வது.. காதல் கொடியது..

கானா பிரபா said...

kalakkal

//Gokulan said...
உண்மை.. நான் கூட அப்படியொருத்தியைத்தான் நம்பிக்கிடந்தேன், என் முட்டாள்தனம் புரிந்த பின்னும் கூட.. என்ன செய்வது.. காதல் கொடியது..//

;-))

kaleel said...

நண்பா ரொம்ப அருமை நண்பா.........
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு நல்லா புரியும் நண்பா .......
என்னோட வாழ்கையில் இதுவும் நடந்து இருக்கிறது ஆனால் முடிவு நீங்கள் சொல்லி இருப்பது போல் இல்லை.......
மொத்தத்தில் ரொம்ப அருமையான உலகத்தின் உண்மை நண்பா!!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//புதுகைச் சாரல் said...
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''

இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல //

வாங்க புதுகைச் சாரல் :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தமிழ்ப்பறவை,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//என்னப்பா இப்பிடி சோகமா முடிச்சிட்டே???
அன்புடன் அருணா //

வாங்க அருணா.
சில காதல்கள் துணையெனக் கருதும் ஜோடிகள் ஏமாற்றுகையில் சோகத்திலேயே முடிகின்றன. என்ன செய்ய ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் கவிநயா,

//காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமன்றி வாழ்க்கையில் தோற்றவர்களுக்கும் பொருந்தும் வரிகள்.. //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி:)

எம்.ரிஷான் ஷெரீப் said...

கோகுலன்,

//உண்மை.. நான் கூட அப்படியொருத்தியைத்தான் நம்பிக்கிடந்தேன், என் முட்டாள்தனம் புரிந்த பின்னும் கூட.. என்ன செய்வது.. காதல் கொடியது..//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கானா பிரபா..

//kalakkal//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாங்க கலீல்,

உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

//நண்பா ரொம்ப அருமை நண்பா.........
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு நல்லா புரியும் நண்பா .......
என்னோட வாழ்கையில் இதுவும் நடந்து இருக்கிறது ஆனால் முடிவு நீங்கள் சொல்லி இருப்பது போல் இல்லை.......
மொத்தத்தில் ரொம்ப அருமையான உலகத்தின் உண்மை நண்பா!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

Sakthy said...

உங்கள் கவிதை சுப்பர் ரிஷான்.
காதலில் தோற்பது இருபக்கத்திலும் தான்..ஆனாலும் கவிதை சொல்லா காதலின் வலியை அந்த படம் பாதி சொல்லுகிறது.. எங்கிருந்து தான் தேடிப் பிடிகிறீர்கள் ?
வாழ்த்துக்கள்

ஆடுமாடு said...

வணக்கம் ரிஷான்.

காதல் ரொம்ப படுத்தியிருக்கு போல. அதிகமா காதல் கவிதைகள்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

நல்லாயிருக்கு.

சமீபத்துல இலங்கை வந்திருந்தேன். கண்டி பொட்டானிக்கல் கார்டன்ல ஏகப்பட்ட லவ் ஜோடி. அங்க லவ் மட்டும் நடக்கலை.

உங்க ஏரியா எங்கன்னு தெரியலை. இன்னும் மூணு மாசத்துல வருவேன். நீங்க இப்ப இலங்கையிலதான் இருக்கீங்களா?

வாழ்த்துகள்.

பஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்

"அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !"

இரு தரப்புக்கும் இந்தவரிகள் சொந்தமானவை. அதிகம் அன்பை எதிர்பார்த்தவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

உங்களுக்கு எங்கிருந்து இந்த அனுபவமெல்லாம் வந்து சேர்கின்றனவென்று தான் யோசிக்கிறேன்

Tamilcooking Admin said...

நல்லாயிருக்கு..ஆனால் ஏன் சோகமா இருக்கு சகோதரா? :(

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சக்தி,

//உங்கள் கவிதை சுப்பர் ரிஷான்.
காதலில் தோற்பது இருபக்கத்திலும் தான்..//

காதலில் தோற்பது இருபுறமும் என்றாலும் அன்பின் பாரம் கூடிய பக்கம் தோல்வியில் கீழிறங்கி வாடும் சாத்தியம் அதிகமல்லவா ஸ்னேகிதி ??

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

//ஆடுமாடு said...
வணக்கம் ரிஷான்.

காதல் ரொம்ப படுத்தியிருக்கு போல. அதிகமா காதல் கவிதைகள்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

நல்லாயிருக்கு.//

அன்பின் நண்பருக்கு,

உங்கள் வருகை எனக்கு மகிழ்வினைத் தருகிறது. :)
நல்லவேளை காதலில் இன்னும் பட்டறியவில்லை. ஆனால் சில சினேகங்களின் துரோகத்தால் வதைப்பட்டு நொந்திருக்கிறேன்.

//சமீபத்துல இலங்கை வந்திருந்தேன். கண்டி பொட்டானிக்கல் கார்டன்ல ஏகப்பட்ட லவ் ஜோடி. அங்க லவ் மட்டும் நடக்கலை.

உங்க ஏரியா எங்கன்னு தெரியலை. இன்னும் மூணு மாசத்துல வருவேன். நீங்க இப்ப இலங்கையிலதான் இருக்கீங்களா?//

அந்த பொட்டானிக்கல் கார்டன் எங்கள் ஊருக்கு அருகாமையில் தான். அரை மணித்தியாலப்பயணம். பொதுவாக இந்தியாவிலிருந்து வந்து நிறையப் படப்பிடிப்புக்கள் நடக்கும் இடம்.
நான் இப்பொழுது கத்தாரில் இருக்கிறேன். உங்கள் மீள்வருகையின் போது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன்.

//வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் பஹீமா ஜஹான்,

//இரு தரப்புக்கும் இந்தவரிகள் சொந்தமானவை. அதிகம் அன்பை எதிர்பார்த்தவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். //

சரியாகச் சொன்னீர்கள் சகோதரி. அதிகம் அன்பைக் காட்டியவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். நேசத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டவர்கள் மிக இயல்பாக அன்பை உதறிவிட்டு வேறு நேசங்களைத் தேடிக் கொள்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் வரவனையான்,

உங்கள் முதல்வருகை என நினைக்கிறேன்..உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.

//நல்லாயிருக்கு..ஆனால் ஏன் சோகமா இருக்கு சகோதரா? :( //

சில வலிகளைச் சோகமாகத்தான் சொல்லமுடிகிறது. என்ன செய்ய ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Saravana Kumar said...

உங்கள் கவிதைகள் படித்து கொண்டு இருக்கிறேன்.. அவை வலி மிக்கதாயும் வலிமையாயும் இருந்தது..

நண்பரே..
காட்சிகள் மாறும் நண்பரே..
இது விதி.. விதிகள் எப்போதும் வட்டவடிவானவை.. சுழன்றுகொண்டேயிருக்கும்..
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. பிற்பகல் செய்யின் மறுநாளின் முற்பகலில் விளையும்..
அந்நாளின் இரவு மட்டுமே உண்மையறியும்..

விடியாது போனதாய் எங்கும் சரித்திரமில்லை..

M.Saravana Kumar said...

உங்கள் மொத்த பதிவுகளையும் படித்துவிட்டேன்..
உங்கள் எல்லா கவிதைகளும் அற்புதம்.
இன்னும் நிறைய எழுதுங்கள்..

:)

ராமலக்ஷ்மி said...

//முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !//

இப்படித் தன்னைத் தொலைத்துக் காலத்தைப் பார்க்க மறந்து மறுத்தவர்களை எல்லாம் காலம் எங்கு கொண்டு நிறுத்தியது நிறுத்தும் என அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்.

கவிநயா said...
//காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமன்றி வாழ்க்கையில் தோற்றவர்களுக்கும் பொருந்தும் வரிகள்..//

வழி மொழிகிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சரவணகுமார்,

//உங்கள் மொத்த பதிவுகளையும் படித்துவிட்டேன்..
உங்கள் எல்லா கவிதைகளும் அற்புதம்.
இன்னும் நிறைய எழுதுங்கள்..

:)//

எனது எல்லாக் கவிதைகளையும் வாசித்ததோடு நின்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் கருத்துக்களெழுதியும் ஊக்கப்படுத்துகிறீர்கள். இன்னும் எழுதுவேன் நண்பரே :)


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//இப்படித் தன்னைத் தொலைத்துக் காலத்தைப் பார்க்க மறந்து மறுத்தவர்களை எல்லாம் காலம் எங்கு கொண்டு நிறுத்தியது நிறுத்தும் என அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)