ரிஷானின் திடீர் மறைவும் அது ஏற்படுத்திய தாக்கங்களும்...!

அவ்வளவாக இல்லை. ஐந்தே ஐந்து நாட்கள்தான்.

அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்.

அங்கு இணையமில்லை. கைபேசி (Mobile) இல்லை.ஏதோ மந்திரித்துவிட்ட நாட்டுக் கோழியாகச் சுற்றிவந்து பார்க்கையில்தான் மின்னஞ்சல் பெட்டி (Mail inbox ) நிரம்பிவழிவது தெரிகிறது. ஊர் சுற்றி வந்த களைப்பைப் பார்க்கமுடியுமா என்ன ?



வலைப்பதிவுலக நண்பர்கள்
சந்திரமௌலி, பாஸ்கர், தணிகை, கார்த்திக், பிரேம்குமார், மீறான் அன்வர், ரசிகவ் ஞானியார், ரஸீம், கலீலுர் ரஹ்மான்,குட்டிசெல்வன்,காமேஷ், அஜித்குமார்,ஆயில்யன்,நாராயணன் சுப்ரமணியம் சகோதரிகள் ஷைலஜா,ஸ்வாதி,காந்தி,சாந்தி, சூர்யா,கவிநயா, சத்யா,நட்சத்திரா, சஹாராதென்றல், வாணி, பஹீமா ஜஹான் என அத்தனை பேரும் தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், குழும மின்னஞ்சல்கள் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகவும் எனது அழைப்பின் கதவுகளைத் தட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறீர்கள்.



கைபேசியின் கைதவறிய அழைப்புக்களிலெல்லாம் நண்பர்களின் எண்களோடு புதுப்புது நாடுகளின் புதுப்புது எண்கள். அத்தனையோடும் எனது குரலினை இணைக்கமறந்தமைக்கு மன்னியுங்கள் நண்பர்களே. 'பட்டப்பகலில் வெட்டவெளியில் கைவிளக்கெதற்கு ? ' என்பதனைப் போல தொடர்பு எல்லைகள் நீங்கிய பாலைநிலமதில் கைபேசியெதெற்கு என அலுவலக நண்பரிடம் கொடுத்துப் போயிருந்தேன். அவர் எனக்கு வந்த அலுவலக எண்கள் தவிர்த்து எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலெதுவும் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு அறபுமொழியைத் தவிர்த்து வேறு பாஷைகள் தெரியாது.



குழுமத்தில் சகோதரி ஷைலஜா எழுதிய கவிதை ஆனந்தத்தில் விழிகலங்கச் செய்கிறது.



கவலையாய் இருக்கிறது

கற்பனைகள் நிஜத்தின் நிழல்தானோ

நிழல்நிஜமாகிவிடவேண்டாம் என்று

நெஞ்சம் தவிக்கிறது

கவிதை ஒன்று எழுதிவிட்டு

காணாமல் போயிருக்கும்

அன்புத்தம்பி ரிஷான்

அன்று ஒருநாள் சொன்னாரே

நினைவிருக்கிறதா

இலங்கைச் செய்திகளை

இடைவிடாது அளிக்கும்

தனக்கும் பாதுகாப்பு இல்லை என்று?

தொலைபேசியில் தொடர்பு கொண்டும்

மின்மடல்கள்பல அனுப்பியும்

பதில் ஒன்றும் இல்லை

தெரிந்தவர்கள் தகவல்சொன்னால்

செரிக்கும் என் உணவு.



நாலைந்து நாட்பிரிவுக்கே எவ்வளவு அன்பாக விசாரிக்கிறீர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும்...? இந்த உலகில் இக்கணத்தின் அதிர்ஷ்டக்காரன் நான்தான் என எண்ணவைக்கிறது. ஏதோ ஒரு ஊரிலிருந்து வந்து எழுத என ஆரம்பித்து இன்னும் ஒருவருடம் கூடப் பூர்த்தியாகவில்லை. யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்ததும் இல்லை. அதற்குள் உண்மையான நண்பர்களின் ஆதிக்கத்துக்குள் நான். மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். நன்றி இறைவனே...! நன்றி நண்பர்களே..!

இந்த அன்பும், நேசமும் என்றும் தொடர வேண்டுகிறேன்...!



என்றும் அன்புடன் உங்கள்,

எம்.ரிஷான் ஷெரீப்

உன்னைப் புலம்பும் எனது பாடல் !


அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !

ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !

அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !

அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !

முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !

அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

என் ஜன்னலின் சினேகிதி !


ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.

*****

"வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? "

"வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் "

*****

ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.

அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.

*****

" இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?"

" இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்."

"உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே."

"ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு."

*****

உங்களுக்குத் தெரியுமே...?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.

இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.

*****

"வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? "

"இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?"

"அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்."

"ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்"

*****

என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
"ச்சூ...ச்சூ..."
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.

*****

"பிள்ளைகள் வரேல்லியே?"

"இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்."

"ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை."

"இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்."

"ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது."

*****

அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.

உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.

*****

"உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? "

"ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க 'ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்'எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்."

*****

கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?

நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?

*****

"குழப்படியேதும் பண்றவவே?"

"இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ."

*****

உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.

பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?




-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

சொற்களின் விளக்கங்கள் :-

# கனக்க - அதிகமாக
# வெள்ளனை - காலைநேரம்
# பொண்டு - பெண்கள்
# கன நாள் - நீண்ட நாட்கள்
# ராவு - இரவு
# முத்தம் - முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை - மிக விருப்பம்
# வடிவு - அழகு
# தேத்தண்ணி - தேனீர்
# குசினி - சமையலறை
# காக்கை - காகம்
# சாத்தாவாரி - ஒரு வகைக்கீரை

த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை'


எப்போதும்
எனது
சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்
மனதில்
ஒளிந்திருக்கிறது


முன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் 'தனிமையின் நிழல்குடை' கவிதைத் தொகுப்பை சகோதரி கவிஞர். பஹீமா ஜஹான் எனக்கனுப்பியிருந்தார்.கடல் தாண்டித் தேசம் தாண்டி வரச்சற்றுத் தாமதமானாலும் கூட வந்து சேர்ந்த அன்றே வாசித்துப் பார்த்தேன்.அதன்பிறகு பலமுறை.ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இவரது கவிதைகளொவ்வொன்றும் வித விதமான வெவ்வேறு அர்த்தங்களைப் பாடுவதாகவே படுகிறது.

பின்புலத்தில் ஒரு மரம்.காற்றில் இலைகள் அசைவதாகக் கூட இல்லை.புல்லாங்குழல் ஊதியபடி எவ்வித அலங்காரங்கலுமற்ற ஒரு சிறுவன்.இதுதான் வசீகரமான அந்த முன்னட்டை ஓவியம்.அந்தப் புல்லாங்குழலின் துளைகளினூடு வெளித்தெரியாத தனிமையின் இசை வழிந்தோடிக் கொண்டிருப்பதாக இருக்கக் கூடும்.

மேலுள்ள இவரது கவிதை முன்னட்டையின் பின்புறத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது.சிறியதாகவோ,பெரியதாகவோ ஒருவரைப் பற்றிய தீர்ப்பினை மனதில் எழுதிவிட்ட பிறகே அவருடனான நமது உரையாடல் சாத்தியப்படுகிறது.அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதிலாவது அவரது முழுக்கருத்தை மட்டுமே அசைபோட்டுக்கொண்டிருக்குமா நமது எண்ணங்கள்?

உரையாடலின் மறுபுறத்திலுள்ளவர் நமக்குப் பிடித்தவரெனில் அவர் பேசுவதத்தனையிலும் இனிமை பொங்கிவழிவதாகவே காண்போம்.அவர் நமது மனதுக்கு ஒவ்வாதவராக இருப்பின் ?அவரது பேச்சில் நல்லவைகளிருப்பினும் ஏதோ கெடுதியொன்றைச் சொல்வதாகவே அர்த்தப்படுத்திக் கொள்வோம்.

மனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போகும் மாயப்பாதங்களை இவரது மேலுள்ள கவிதை வரிகள் கொண்டிருக்கின்றன.அடிக்கடி அசைபோட வைப்பதையும்,யாருடனாவது உரையாட நேரும் தருணங்களில் எண்ணத்தில் வந்துபோகும் அற்புதத்தையும் இவ்வரிகள் தம்மில் சுமந்தவண்ணம் இருக்கின்றன.இனித் தொகுப்பினுள் நுழைவோம்.வாருங்கள்.

மழை எப்பொழுதுமே தன்னுடன் மாயங்களையும்,விசித்திரங்களையும்,அற்புதங்களையும் துளிகளுடனும் ஈரத்துடனும் எடுத்துவருபவை.முதல் மழைத்துளி நம்மை நனைத்த கணமோ,அதனைப் பார்த்த கணமோ நம்மில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?
மழை பொழியும் அந்தப்பொழுதில் அவரவர் எண்ணங்களைப் பொறுத்து மழை அழகாயும் இருக்கலாம,ஆபத்தாகவும் இருக்கலாம் ஏன் இடையூறாகக் கூட இருக்கலாம்.ஆனால் மழை பற்றிய ஈரக்குறிப்புகள் மட்டும் நம் மனதை விட்டு என்றும் நீங்காதவை.

இத் தொகுப்பின் முதல் கவிதையாக உள்ள 'மழை என்னும் பிராணி' கவிதையின் இறுதி வரிகளிவை.

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப் போயிருக்கிறது
தூக்கம்

மிகத் தெளிவான வரிகள்.அத்தனை சொல்லிலும் ஈரம் சொட்டச் சொட்ட.மழைக்கால இரவுகளில் விழித்திருந்த நினைவுகள் மீளவும் மீட்டப்படுகின்றன.அத்துளிகள் காய்ந்திருக்கும் இப்பொழுது.மேகங்கள் ஈர்த்து வேறு இடங்களில் வேறொருவர் உறக்கத்தைப் பறிக்கப் பெய்துமிருக்கும்.ஆனாலும் நம் தூக்கம் பறித்த அந்த மழை இரவுகள் எப்பொழுதும் மனதில் ஈரம் சொட்டிக்கொண்டே தானே இருக்கும்.

இவரது 'மீள் நினைவு' கவிதை ஞாபகங்களின் அடுக்கைத் தோண்டவிழைகிறது.நமது அத்தனை ஞாபகங்களிலும் ஏதோவொரு சடப்பொருளோ,உயிர் ஜீவனோ அடக்கமாக உறங்கிக்கொண்டிருக்கும்.நினைவு விரலின் சிறுதொடுகை போதும் அதனை ஊர்ந்திடச் செய்யவும் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கச் செய்யவும்.அதனை மிக அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கொஞ்சம்
நளினமாய் மோதும்
மெல்லிய காற்று,
ஏன்?
ஒரு
தேனீர்க்குவளையின்
ஓரம்கூடப் போதுமானதாயிருக்கும்
ஞாபகங்களைக்
கிளறி விடுவதற்கு


பதிலிட முடியாக் கேள்விகளும்,தவறான விடைகளே பதில்களாக அமைந்த கேள்விகளும் அழுத்தும் கொடூர பாரமதனை 'சிந்திப்பது குறித்து' கவிதையில் இறக்கிவைத்து விடுகிறார் அகிலன்.

நான்
சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்..
அது என்னைக்
கேள்விகளால் குடைந்து
கொண்டேயிருக்கிறது.
அது
எப்போதும் மகிழ்ச்சியின்
எதிரியாயும்
துயரத்தின்
தொடர்ச்சியாயுமே நீள்கிறது.


அழகுத்தோல் போர்த்திய குரூரங்கள்,கொடிய விஷங்களைக் கொண்டு நிரப்பிய மனங்கள் இவரில் ஏற்படுத்திய தாக்கங்களினைப் பின்வரும் வரிகள் சொல்கின்றன.

எல்லோருடைய
புன்னகைகளின் பின்னால் உள்ள
வேட்டைப்பற்கள் குறித்தும்
ஒளிரும் ஒவ்வொரு வார்த்தையினதும்
குரூர நிறத்தையும்
சிந்தனைதான்
எனக்குச் சொல்லித்தருகிறது


எதைப்பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிடுவது குறித்தான தீர்மானத்தையெப்படி அடைந்தாரென்பதை இப்படியெழுதிக் கவியினை முடிக்கிறார்.

புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
மனிதர்களின்
கண்களின் பின்னால் உள்ள
இருள் நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான்
நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான்
சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்


தேவதை குறித்த சொற்கள் எந்தக் கவிஞருக்கும் இடறாமல் இல்லை.சிறு வயதில் தேவதைக் கதைகளையும் சாத்தான்களின் கதைகளையும் கேட்டவாறே வளர்கிறோம்.பின்னாட்களில் சாத்தான்கள் எப்பொழுதுமே வாழ்வினைச் சூழ்ந்திருக்க, தேவதைகளை மட்டும் எப்பொழுதாவதுதான் சந்திக்கநேர்கிறது.அப்படித் தன்னால் பார்க்க நேர்ந்த ஒரு தேவதைப் பெண்ணைப் பற்றித் தனது 'உரசிப் போகும் பட்டாம்பூச்சி' கவிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

நான்
அவளைக் காண்கிறேன்
தேவதைகள் நிரம்பிய தெருவில்
அவளை மட்டுமாய்
தனியே
அவள்
கண்களில் இருந்து பறந்து போகும்
பட்டாம் பூச்சியைக் குறிவைத்து
நடந்தபடியோ
கொக்கான் வெட்டியபடியோ
அல்லது
முந்தையநாள் இரவில்
தன்னோடு உறங்கமறுத்த
பூனைக்குட்டியைப்பற்றிய
ஏக்கம் நிரம்பிய
சொற்களோடோ தான்
அவள் எப்போதுமிருக்கிறாள்...


தேவதையின் பார்வை வீச்சினைப் பட்டாம்பூச்சிக்கு ஒப்பிடும் கவிஞர் அந்தப் பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில் உருவான தென்றல் தன்னில் மோதிச் சென்ற அனுபவத்தை

எப்போதாவது
நான்
தேவதைகளின் தெருவில்
நடக்க நேர்கையில்
என்னை உரசிச்செல்கிறது
அவள்
கண்களின் பட்டாம்பூச்சி


எனச் சொல்கிறார்.இதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 'சொற்களைத் திருடிய வண்ணாத்தி' கவிதையில் வெளிப்படுகிறது.

உன் மௌனம்
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது.

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு
தம் சிறகுகளால்
காலத்தைக் கடந்தன வண்ணத்திகள்


இரு மனக்காதலின் பின்னரான மௌனங்களும்,முத்தங்களும் எப்பொழுதும் சலனத்துக்குரியவையாகவே இருக்கின்றன என்பதனைச் சொல்வதனை

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப் பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை


இக் கவிதையின் முடிவினில் பார்க்கக் கிடைக்கிறது.

வாட்டி வதைத்த கோடைக் காலமொன்று தான் பீடித்திருந்த எல்லாவற்றையும் விட்டு நீங்கிச் சென்றதைச் சொல்லும் 'கோடை/02' கவிதையின் இறுதிப் பகுதி மிகவும் அழகானது.

மழைக்குத் தாளமிடும்
சிறுமியின் புன்னகை
கூரை
கடந்து விழும்
முதல் துளியில்
கரைந்தவிழ

அவள்
காலடியில் உடைந்து
அழத்தொடங்குகிறது
கோடை..


பெருங் கோடைக்குப் பின்னரான முதல்மழையில் எல்லா மனங்களும் குதூகலிக்கும்.வரண்ட செடி முதற்கொண்டு வியர்த்த மனிதர்கள் வரை அனைவரினது விழிகளும் ஆகாயத்தையே மழைக்காக நோக்கியவண்ணமிருக்கையில் பெய்யும் முதல்மழை எவ்வளவு உவகையை அள்ளிவருகிறது...?!

புன்னகையைப் போர்த்திய துயரத்தின் குரூரம் மிகும் பரவுதலை இவரது 'துயரின் பயணம்' கவிதை சொல்கிறது.கவிதையின் பாடுபொருளை மிக அழகான எளிய வரிகளில் சுருக்கமாகச் சொல்வதில் தான் இவரது சூட்சுமம் இருக்கிறது.

எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்

ஒரு
புன்னகையில் இருந்து
மற்றுமோர்
புன்னகைக்கு...

வழிநெடுக
புன்னகைகளை
வாரியணைத்தபடியும்
ஒவ்வொரு
புன்னகையின்
முகத்திலும்
தன்னை
அறைந்தபடியும்
பயணிக்கிறது
துயரம்...


துயர் சூழ்ந்த ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் அது பற்றிக்கொள்வதனை

அது தன்
தீராக் காதலோடு
தொடர்ந்தும் இயங்கும்
இன்னொரு
புன்னகையை நோக்கி


இப்படியெழுதி முடிக்கிறார்.

இவரது முத்தங்களைப் பூக்களுக்கும் காதலி நிராகரித்த முத்தங்களை வாடிய பூக்களுக்கும் ஒப்பிட்டு காலம் காலமாய் வாடிய பூக்களை மட்டுமே சேமித்த மனதினைத் திறந்து காட்டுகிறார் காதலிக்கு இவ்வாறாக.

பூக்களால் ஆகிறது
ஒரு கவிதை.

என் எதிரில்
பூக்களைத் தவறவிடா
உன் உதடுகள்.

ஆனாலும்
நான்
நிறையப் பூக்கள்
கொண்டுவருகிறேன்
புறந்தள்ளிப் போகிறாய்...

அவை
ஒவ்வொன்றாய்
வாடி வீழ
உன்
ஒவ்வொரு மறுதலிப்பின்
முடிவிலும்
நான்
பூக்களைச் சேமிக்கிறேன்.


இவரது இந்தக் கவிதை 'உன் புன்னகை குறித்து' தலைப்பின் கீழிருக்கிறது.

இக்கவிதையினைத் தொடர்ந்து அடுத்துவரும் கவிதையான ‘சூரியனின் சித்திரம்' கவிதையில் பூவைப் பெண்ணுக்கும் சூரியனை ஆணுக்கும் ஒப்பிட்டு எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது.

ஒவ்வொரு பூவிடமும்
இருக்கிறது சூரியன்
குறித்த சித்திரம்


தனக்கு வரப்போகும் கணவனான ஆணைப் பற்றிய எண்ணக்கரு எப்பொழுதுமே ஒரு கன்னிப்பெண்ணின் இதயத்தில் குடியிருந்துகொண்டே இருக்கும்.

பூக்களைத் தமக்குள்
பதுக்கிக்கிடக்கும்
மொட்டுக்களின்
முதுகுகளில்
எழுதப்படுகிறது
சூரியனின் தோல்வி

பூக்களின் முகங்களில்
ஒட்டிக்கிடக்கிறது
சூரியனின் புன்னகை


எப்பொழுதும் பெண் வதனத்தின் மலர்ச்சியில்தான் அவளை நாடும் ஆணின் உவகை இருக்கிறது.

ஆனாலும்
இரவில்
நிலவுக்குப் பயந்து
அவற்றை
உதிர்த்துக்கொண்டு
தம்மை உரிக்கின்றன
மரங்கள்.


ஆனால் பெண்ணானவள் சடங்குகள்,சம்பிரதாயங்கள் என்ற எல்லைகளுக்குள்ளே மட்டுமே வளையவர விதிக்கப்பட்டவள்.இங்கு நிலவு அதற்கு ஒப்பிடப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.நிலவானது வளரும்,தேயும்.ஆனால் பெண் ? அவளது எல்லைகள் ? எல்லைகளை விதித்த மரங்களே அதற்கான தண்டனையாக தம்மை உதிர்த்துக் கொள்கின்றனவோ?

எல்லோருடைய எதிர்பார்ப்புக்களுமான ஏக்கங்கள் சில 'எதிர்பார்ப்பு'கவிதையில் வருகின்றன.

என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்?
ஒரு துளி
கண்ணீர் கூட
உதிர்க்கலாம்


என்
கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்
அதை நீ
பூக்களால்
நிறைக்கலாம்


எப்பொழுதுமே சலனத்துக்குரிய எதிர்பார்ப்புக்கள் இவை.ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் ஈடேறுமா என நாம் அறிவோமா?
ஆனால் இக்கவிதையின் அடுத்த வரிகள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் அற்றன.

நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது


எந்த எண்ணமும் அற்ற மனதில் ஒரு விடையறியாக் கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.அது

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையாயிருக்கிறதா?


ஒரு அதிர்வை ஏற்படுத்தும் கேள்வியல்லவா இது?எவ்வளவு அழகாக கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.

தாய்நாட்டினைப் பிரிந்த துயரத்தையும் அதனாலான இழப்புகளையும் வலிகளோடும்,தைக்கும் நிதர்சனத்தோடும் சொல்கிறது 'கடலின் வரிகள்' கவிதை.

எனது தெருவின் புழுதி
சிறு அடைப்பெனக் கிடக்கலாம்
நுரையீரல் கோளங்களிற்குள்


சிறு வயதில் தெருவலைந்து உடலும் சுவாசமும் சுமந்த புழுதி கழுவிடக் கழுவிடக் கரைந்து போய்விடுமா என்ன?காலம் கழுவி விட்டால்தான் உண்டு.காலம் அதனைச் செய்தாலும் தெருவின் புழுதிவாசம் மட்டும் நாசிக்குள்ளேயே இருக்கும்.

முற்றத்தின்
ஞாபகங்களைத் தேக்கிவைத்திருக்கும்
என் காலடி மறுபடியும்
திரும்புவதற்கில்லை.

அண்ணியிடம் சோற்றைப்
பிசைந்து தருமாறு சண்டையிடமுடியாது
குட்டிப்பையனின் எச்சில் முத்தங்கள்
மழலை அழைப்புக்கள்
கிடையவே கிடையாது

இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது


தாய்நாட்டைப் பிரிந்ததான ஏக்கமும்,பழைய தடங்களும் அதனுடனான வலியும் கவிதையில் எளியவரிகளில் வெளிப்படுவது மிகச்சிறப்பு.அதுவே வாசிக்கும்போது மனதில் எளிதில் பதிந்துவிடக் கூடியதாக இருக்கிறது.

நமைச் சூழ நடக்கும் அத்தனைக்கும் ஒரு மௌன சாட்சியாகவே நமது ஜீவிதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளை,தூக்கம் பறிக்கும் செயல்களை ஜீரணிக்கமுடியாக் கோபம் 'சாட்சியாயிருத்தல்'கவிதையில் வெளிப்படுகிறது.

புன்னகைக்கும்
வேதனைக்கும்
அழிவுக்கும்
மீட்சிக்கும்
அவமானத்திற்கும்

இப்படி
எல்லாவற்றுக்கும்
சாட்சியாய்
மௌனத்தை விழுங்கிக் கொண்டு
எத்தனை நாளைக்கு
இருந்துவிட முடியும்.


அகதியாகிப்போன அக்காவுக்கான கடிதமென அகிலன் வரைந்திருக்கும் கவிதைதான் 'இது கவிதையில்லை'.இக் கடிதம் ஒரு அக்காவுக்கு மட்டுமான கடிதமா என்ன?

எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
என்பது.


தாய்தேசத்திலேயே அகதியாகி வேதனைகளைச் சும்ந்துகொண்டிருக்கும் அத்தனை உயிருக்குமான கடிதம் அது.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிறைப்படுத்தப்பட்டதான வாழ்க்கையின் வேதனை வரிகளை இவரது 'அம்மம்மாவின் சுருக்குப் பை' கவிதையும் சொல்கிறது.

சிட்டுக்குருவியின்
இறகுகளில்
பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை..

ஒரு
வேட்டைக்காரனின்
குறிக்குள் வீழ்ந்தபின்
வரையறுக்கப்பட்ட
வானத்திடம்
அதிசயங்கள் ஏதுமில்லை.

தடங்கள்
இறுகிக் கொண்டன
.

மென்மையாகவும் பத்திரமாகவும் இருந்த வாழ்க்கையானது யுத்தத்தின் பிடியில் சிக்கிட நேர்ந்ததன பிற்பாடு அதன் எல்லைகள் சுருங்கிவிட்டதென வலியோடு சொல்கிறது இக்கவிதை.

இவருடைய 'சாத்தானுடன் போகும் இரவு' கவிதையும் கொடூரம் போர்த்திய யுத்த ஊரின் இரவைப் பற்றிப் பேசுகிறது.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்த சாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்
இரவுக்குக் கைகள் முளைத்தன.

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


பல உயிர்களைக் காவு வாங்கும் இரவின் இருளொன்றில் எத்தனை சாத்தான்கள் ஒளிந்திருக்கின்றன?அத்தனை சாத்தான்களாலும் அகோரங்களே நிகழ்ந்திட

சூரியனைப் போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.


என முடிக்கிறார்.சாத்தான்களுடனான இரவுகள் மட்டும் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

இதே போன்ற இவரது இன்னொரு கவிதையான 'அடுத்து வரும் கணம்' இப்படிச் சொல்கிறது.

துப்பாக்கிகளிற்குக்
கால்கள் முளைத்த இரவில்
அவை வெறிகொண்டெழுந்தன

ஒரு கலையாடியின் கோபம்போல
இரவு முழுதும் பெய்த மழையில்
கரைந்து போயிருந்தது
பலியாடுகளின் இரத்தம்


வழிநெடுகத் துரத்தும் வலிகளையும் அச்சத்தையும் குறித்துக் கவிதையை முடிக்கிறார்.

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பக்கிடக்கின்றன
வழிமுழுதும்.


போர்ப்பிரதேசமொன்றில் நாட்கள் நகருகையில் அங்கு வாழ்ந்திட நேரும் குழந்தைகளுக்கான இராக்கதைகளில் துப்பாக்கிகள் இருக்கும்.ஆனால் தேவதைக்கதைகளை எத்தனை பேரால் சொல்லவியலும்? தாம் வாழ்ந்த அழகிய தேசமதனை அழிந்திடச் செய்ததை தைரியமாகப் பேசமுடியுமா என்ன? 'துப்பாக்கிகளும் சில தேவதைக் கதைகளும்/02' பாருங்கள்.

நான்
தேவதைக் கதைகளை
எழுதிக்கொண்டேயிருப்பேன்

ஏனெனில்
சபிக்கப்பட்ட என் நிலத்தில்
தேவதைகள் குறித்த
சொற்கள் மட்டுமே
துப்பாக்கிகளால்
அச்சமூட்டப்படாதிருக்கின்றன.

இப்போதெல்லாம்
இன்னுமின்னும்
அச்சமூட்டப்பட்டிருக்கின்றன
சொற்கள்.
புன்னகைகளைப்
பலியிட்டுவிட்டபின்
சொற்களையும் பலியிடுவோம்.


அகிலனின் 'வெட்கக் குறிப்புகள்' கவிதை காதல்,யுத்தங்களிலிருந்து விடுபட்டு வேறொரு நிதர்சன உலகைக் கண் முன்னே கொண்டுவருகிறது.அதிலிருக்கும் 3 சின்னக் கவிதைகளும் சொல்லும் அனுபவங்கள் அனைவருக்கும் வாய்த்திருக்கக் கூடுமானவை.

இரவிற்கு வெளிச்சம் பிடித்து வரும் நிலவினைச் சாடுகிறார் தன் 'மதங்கொண்ட நிலவு' கவிதையில்.இரவின் கறுப்பில் நிகழும் அத்தனை அநீதிகளுக்கும் சாட்சியாகப் பார்த்திருக்கும் நிலவு,இவரின் கவிதையின் இறுதியில் இப்படி வருகிறது.

யாரும்
விசாரணைகளை நிகழ்த்தும் வரை
எல்லாவற்றினதும்
மௌனச் சாட்சியாய்
அலைந்து கொண்டேயிருக்கும்
அது.


ஒரு அடர் வனாந்திரத்தையும் சமுத்திரத்தையும் கடந்து வந்த நிகழ்வினை 'காட்டின் நினைவு' கவிதையாக்கியிருக்கிறார்.இக்கவிதையில் காட்டைப் பற்றியும் கடலைப்பற்றியுமான இவரது பார்வை வியக்கவைக்கிறது.

காடு
அடர்ந்திருந்தது
அதன் ரகசியங்களைப் போல
எங்களையும் விழுங்கிக்கொண்டு
மௌனமாய்.
ஆனால்
கடல்
அப்படியல்ல அதனிடம்
ரகசியங்கள் கிடையா
அதற்கு மௌனமும் தெரியா !


விடையறியாக் கேள்விகளை முன்னிறுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகையில் வதையுர நேரும் அவலத்தை 'கேள்விகளின் குகை'கவிதை சொல்கிறது.இக்கவிதையின் இறுதிவரிகள் மனம் அதிரச் செய்பவை.

சுவர்
உறுஞ்சிக் கறுத்த
இரத்தத்தின் சுவடென
இரவு கவிகையில்..
என் இதயத்தின் ஒலி
அவன் காதுவரைக்கும் வந்து
அச்சமூட்டுவதாய்
அருகில் அழுதவன்
சர்வ நிச்சயமாய்ச் சொன்னான்.


யுத்தத்தின் பெருவலியைச் சுமந்த கவிதைகளும்,காதலின் கடைக்கண் தீட்டிய பேருவகையைக் கொண்டாடும் கவிதைகளும்,சுயத்தினைப் பாடும் கவிதைகளும்,இங்கு குறிப்பிடப்படாக் கவிதைகளுடன் சேர்த்து 'தனிமையின் நிழல் குடை'யில் நிறைந்திருக்கின்றன.முழுவதுமாய் வாசித்துமுடித்ததன் பிற்பாடு எழுதியவரைக் கவிதைகளினூடு புரிந்துகொள்ள முடியுமாயிருக்கிறது.இதுவே தனது படைப்புகளினுள் வாழும் கவிஞரின் வெற்றியெனலாம்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

அண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன்.



மிகவும் அதிர்ச்சியளித்தது அந்த வலைத்தளம்.எனது மூன்று பதிவுகளைத் திருடி (என்னிடம் அனுமதியைப் பெறாமல் தன் பதிவிலிட்டுள்ளதால் வேறு சொல் தெரியவில்லை) தனது வலைத்தளத்தில் இட்டிருக்கிறார்.நீக்கிவிடச் சொல்லி பின்னூட்டம், மின்னஞ்சல் மூலம் அறிவித்தும் இதுவரையில் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.



என்னுடைய பதிவுகள் மட்டுமல்ல. சகோதரி கமலாவினது சமையல் குறிப்புகளும் அங்கிருக்கின்றன.மற்ற பதிவுகளின் பதிவர்கள் யாரெனத் தெரியவில்லை.



எனது மனிதாபிமானம் உங்களுக்கு மாத்திரமா ? பதிவு அங்கு,

எனது பெட்டி,பெட்டியாகத் தர்பூசணிகள் பதிவு அங்கு,



எனது யானைகள் பதிவு அங்கு,

சுயமாக எழுதத் தெரியாவிட்டால் ஏன் பதிவெழுதவேண்டும் ? இல்லாவிட்டால் பதிவின் சொந்தக்காரரிடம் அனுமதியைப் பெற்று தன் வலைத்தளங்களில் இடலாமே ? ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில் அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?

எரிக்கிறாய் ; எரிகிறேன் !


எனதுயிருருக்கும் பாடலைப்
பின்பற்றி வந்த உன் நேசம்
எனக்கென்றிருந்த
ஒரேயொரு கேடயத்தையும்
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்
வருத்தம்தான் எனக்கு..!

ஆதியின் மூலங்களறுத்து,
சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்

நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்

என் நெற்றியில் தொடங்கியுன்
கூராயுதங்கள் கீறுகின்றன,
உயிருருகி வழியும் குருதியில்
தாகம் தணித்துக்கொள்கிறாய்
என் உயிரின் மூலங்களை
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
என் வாழ்வின் தீர்ப்பினை
இவ்வாறு நீயே எழுதுகிறாய் !

சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும் ;
நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !

இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

மனிதம் நசுங்கிய தெரு !


வீட்டினை நெருங்கும் முன்பே ஏதோ ஒரு விபரீதம் நிகழ்ந்திருப்பது புரிந்து போயிற்று.வீட்டின் பக்கவாட்டால் செல்லும் பாதையை நோக்கி மக்கள் கலவரம் போர்த்திய முகங்களோடு அவசர,அவசரமாக முன்னேறிக்கொண்டிருந்தனர்.நானும் கலவரமடைந்தவனாக அவர்கள் எதை நோக்கி ஓடுகிறார்கள் என ஆவல் உந்தித்தள்ளப் போய் அனைவரினதும் பார்வைப் புள்ளி மையத்தினை நோக்கினேன்.

லொறியொன்றின் முன் டயருக்குள் பிரேமா அக்கா சிக்குண்டிருந்தாள்.தோள்பட்டை,நெஞ்சுப் பகுதியின் மேலால் டயர் ஏறியிருந்தது.இரத்தம் ஒரு சிறு ஊற்றைப்போல அந்தச் சிறு தார் வீதியெங்கும் பள்ளம் நோக்கி ஓடத்துவங்கியிருந்தது.உயிர் பிரிந்திருக்க வேண்டும்.விழி திறந்து கருமணிகள் இரண்டும் வானம் நோக்கி உறைந்து போயிருந்தன.

கூட்டுறவுக்கடைக்குப் போய்வந்து கொண்டிருந்தவளை லொறி மோதியிருக்கவேண்டும்.பையிலிருந்த அரிசி,சீனி,ஒரு கொப்பி,சவர்க்காரம்,கூப்பன் கார்டும் வீதியில் சிதறிக்கிடந்தன.அரிசி மணிகளை நாளை கோழிகள் உண்ணக் கூடும்.அவையும் பிரேமா அக்கா அடைகாக்க வைத்த முட்டைகளிலிருந்து வந்த கோழிகளாக இருக்கும்.

பிரேமா பக்கத்து ஊரைச் சேர்ந்த சிங்களப் பெண்.அவளின்றி இந்த ஊரில் அனேக வீடுகளில் வேலைகள் ஓடாது.துணி துவைப்பது, தேங்காய் உரித்துத் துருவிக் கொடுப்பது முதல்,விஷேட தினங்களில்,விஷேட வீடுகளில் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள்.ஊரில் அவள் கைராசிக்காரி என்றொரு பேச்சிருந்தது.புது மரங்கள் நடுவது,கோழி முட்டைகளை குஞ்சு பொறிப்பதற்காக அடை காக்க வைப்பது என அவளது கைகளால் செய்யப்படும் சில காரியங்கள் பெரும்பலனைக் கொடுக்கவே அவளுக்கு அந்தப்பெயர் சொந்தமானது.அந்தக் கைகளிலொன்றுதான் இப்பொழுது லொறியின் டயருக்குள் நசுங்குண்டிருந்தது.

சடலத்தைப் பார்த்தவுடனே விழிகளை ஒரு கணம் இருக்க மூடிக்கொண்டேன்.ஒரு வைத்தியனாக இருக்குமெனக்கு இரத்தமும்,காயங்களும் பழகிய விடயங்கள் தானெனினும் இப்படியான கோரவிபத்துக்கள் இதயத்தில் ஒரு பேரிடியின் அதிர்வை உணரச் செய்பவை .உடனடியாக எதையுமே செய்யவியலாத தடுமாற்றத்தைக் கொடுப்பவை.

நெருங்கி,அருகில் சென்று நன்றாக இருந்த கையின் நாடித்துடிப்பைப் பார்த்தேன்.மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து உறையத் தொடங்கியிருந்தது.எப்படியும் 15 நிமிடங்களாவது ஆகியிருக்கவேண்டும்.உடனடியாக பொலிஸுக்கும் வைத்தியசாலைக்கும் அறிவிக்கவேண்டும்.யாராவது அறிவித்தார்களோ தெரியவில்லை.அறிவித்திருக்கச் சாத்தியமில்லை.எதற்கும் சிலரிடம் விசாரித்துக் கொண்டேன்.தமக்கெதுவும் தெரியாது என உதடுபிதுக்கினர்.

இன்னுமின்னும் அதிகமாகக் கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது.விஷயம் கேள்விப்பட்டு வீதிக்கு அருகாமையில் வீடிருந்த பெண்களும் சுமதி டீச்சரும் கூட வந்து சடலத்தைப் பார்த்தவாறு கன்னத்தில் கைவைத்து நொந்தனர்.நிச்சயமாக பூனைக்குட்டி,சேவல்,கோழி விபத்துக்களை விழிகசியப் பார்த்தவர்களுக்கு ப்ரேமா அக்காவின் மரணமானது,ஆண்டாண்டு காலமாக,பரம்பரை,பரம்பரையாகச் சொல்லப்படும் கதைகளாக மறக்கமுடியாமல் போய்விடும்.நான் கூட்டத்துக்குள் அம்மாவைத் தேடினேன்.அம்மா அங்கு இல்லை.

சடலத்தின் துணி தொடைவரை விலகியிருந்தது.இரத்தம் பார்த்தாலே மயக்கம் வருவதாகச் சொல்லும் விசாலாட்சிப் பாட்டி,வேலிக்கு இட்டிருந்த கறுப்பு ரப்பர்சீட்டை முடியும்வரை இழுத்துப் பிய்த்து சடலத்தின் அருகிலேயே சென்று கால்பகுதியை மூடிவிட்டார்.

லொறி எந்த ஊருக்குச் சொந்தமானது என அதன் பக்கவாட்டுப் பெயிண்ட் எழுத்துக்கள் தெரிவித்தன.அங்கிருந்த முகங்களில் லொறிச் சாரதியைத் தேடினேன்.புதிதாக எவனுமில்லை.எல்லாம் பழகிய முகங்கள்.விபத்து நடந்த உடனேயே அவன் தப்பித்துவிட்டிருந்தான்.ஊர் இளைஞர்கள் அவனுக்கு அடிப்பதற்காக ஆக்ரோஷமாகத் தேடிக்கொண்டிருந்தனர்.ஒவ்வொருவரும் தங்களது வீரத்தைக் காட்ட ஒரு ஆள் சிக்கும்வரைக்கும் ஒரு புத்தனாகத்தான் நடித்துக்கொண்டிருப்பர் எனத் தோன்றியது.அவனை வீதிக்கு இருபுறமுமிருந்த வாழைத்தோட்டத்துக்குள் தேடித் திரிந்தனர்.அந்த வாழைகளும் பிரேமா தன் கைகளால் நட்டவையாக இருக்கக்கூடும்.

விபத்தினை யாரும் நேரில் கண்டிருக்கவில்லை.ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டுமே போக முடியுமான குறுகிய பாதை.சந்தியில் வைத்துத்தான் விபத்து நடந்திருந்தது.வாகனம் மோதிய பின்னரான பெரிய ப்ரேக் சத்தமும்,ஒரு கூக்குரலும் சனங்களை அங்கு இழுத்துவந்திருந்தன.

முதலில் பொலிஸும்,ஆம்புலன்ஸும் இங்கு வரவேண்டும்.நான் வீட்டுக்கு ஓடினேன்.நானும் அம்மாவும் மட்டுமே வசித்து வரும் வீட்டின் வாசலிலேயே பதற்றத்துடன் நின்றிருந்தார் அம்மா.

"அம்மா,விபத்தொன்று ''.

"ஓம்.தெரியும் மகன்.நீங்க வரும்வரைக்கும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்."

"யாரெண்டு தெரியுமோ? நம்ம பிரேமா அக்கா "

"அடக் கடவுளே..அவளா?" அம்மாவின் கண்கள் சட்டென்று குளமாகின.

"ஓம்..பொலிஸுக்குச் சொல்லணும்"

நான் தொலைபேசியை நோக்கி நகர்ந்தேன்.அம்மா அருகினில் வந்து தோளினைத் தொட்டார்.

"கொஞ்சம் இருங்க மகன்..இப்பவே கோல் எடுக்க வேணாம்.கொஞ்சம் இப்படி வாங்க"

கிட்டத்தட்ட என்னைக் குசினிக்குத் தள்ளிக்கொண்டு வந்தவர் சொன்ன தகவலைக் கேட்டதும் இருந்த பதற்றத்தில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"கொஞ்சமாவது அறிவிருக்கா அம்மா உங்களுக்கு? அங்க பொடியன்மாரெல்லாம் அவனைத் தேடிக்கொண்டிருக்காங்க..நாளைக்குப் பொலிஸ்,கோர்ட்னு யாரு அலையுறது?பொலிஸ்,கோர்ட்டை விடுங்க.ப்ரேமாட ஊர்க்காரங்களெல்லாம் விஷயம் தெரிஞ்சா நம்ம வீட்டு முன்னாடி வந்து நிப்பாங்க..அப்ப என்ன பதில் சொல்றது?''

"இல்ல மகன்..யாருண்டாலும் வேணுமுன்னு செய்வாங்களா?இவனென்ன? வீட்டை விட்டு வரும்போதே இப்படியொருத்தியக் கொல்லவேணுமெண்டு நேந்துக்கொண்டா வந்திருப்பான்? பார்த்தா சின்ன வயசு மாதிரி இருக்கான்."

"இப்ப எங்க அவன்?" இன்னும் என் கோபம் தணிந்திருக்கவில்லை.

"கிளினிக்குள்ள தான் இருக்கான்..இந்தாங்க சாவி..யோசிச்சு ஏதாவது நல்லதா செய்ங்க."

முதலில் கோபத்தை அடக்கிக்கொண்டு பொலிஸுக்கும் வைத்தியசாலைக்கும் விபத்து குறித்தும்,மரணம் குறித்தும் அறிவித்தேன்.

சாவியால் கதவு திறபடும் சத்தம் கேட்டதும் நிலத்தில் சம்மணமிட்டு அமர்ந்து அழுதுகொண்டிருந்தவன் கலவரம் தேக்கிய முகத்தோடு எழுந்தான்.இரு கைகளையும் கூப்பித் தன்னைக் காப்பாற்றும்படி உடல்நடுங்கும் பதற்றத்தோடு மன்றாடினான்.அவன் முப்பதுகளின் ஆரம்பத்திலும்,உயரமானவனுமாக இருந்தான்.பிஜாமா சாறன் அணிந்து பத்திக் டிசைன் போட்ட சட்டை அணிந்திருந்தான்.அம்மா தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.

ஊரை விசாரித்ததில் தொலைதூர நகரொன்றின் பெயர் சொல்லி அதனருகிலுள்ள ஒரு கிராமம் எனச் சொன்னான்.அடையாள அட்டையையும்,சாரதி அனுமதிப்பத்திரத்தையும் வாங்கிப் பார்த்தேன்.ஒரு குறிப்பிட்ட ரைஸ் மில்லின் பெயர் சொல்லி அதற்கு அரிசி லோடு கொண்டுவந்ததாகவும் இந்தப் பாதையில் போனால் சீக்கிரமாக டவுணுக்குப் போய்ச்சேர முடியுமென்று யாரோ சொன்னதை ஏற்று அப்பாதையில் போனதாகவும் சந்தியில் அவளது வருகையை எதிர்பார்க்காமல் அவசரமாக ப்ரேக் போட்டும் அவள் மோதுண்டு விழுந்து டயருக்குள் சிக்குண்டாள் எனவும் சொன்னான்.

"என்னைப் பொலிஸில் ஒப்படைச்சிடுங்க ஐயா.தெரியாத ஊரு.தெரியாத மனுஷங்க.அங்க நின்னா அடிச்சிடுவாங்கன்னு தெரியும்.பொலிஸுக்குப் போகத்தான் இறங்கி ஓடிவந்தேன்.இங்க பொலிஸ் எங்க இருக்குங்குற திசை கூடத் தெரியாது.உங்களோட டொக்டர் போர்டைப் பார்த்தேன்.அதான் இங்க ஓடிவந்தேன்.என்னைப் பொலிஸ்ல ஒப்படைச்சிடுங்க ஐயா " வார்த்தைகள் தடுமாறியவனாக சிங்களத்தில் சொல்லிமுடித்தான்.

நான் எதுவும் சொல்லாமல் கிளினிக் அறையை விட்டு வெளியே வந்தேன்.அம்மாவிடம் அறைச் சாவியைக் கொடுத்தேன்.
"அம்மா ரூமைப் பூட்டிடுங்க..வெளிக்கதவையும் பூட்டிடுங்க.நான் அங்க போய்ப் பார்த்துட்டு வாறேன்.யார் வந்து கதவு தட்டினாலும் திறந்துடாதீங்க."

இவன் இப்பொழுது பெரும்பிரச்சினையாக மாறிப்போனான்.அடைக்கலம் கொடுத்த அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது.ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தாலும்,ஊரார்களிடமிருந்து மறைத்த காரணத்தாலும் இனி நானும் அவர்கள் கண்களில் குற்றவாளியாகப் பார்க்கப்படுவேன்.இரு ஊரிலிருந்தும் வைத்தியத்துக்காக வரும் சனங்கள் குறைந்துவிடும்.

பிரேமாவின் கணவனுக்கும்,ஊராருக்கும் தகவல் போயிருக்கவேண்டும்.சர் சர்ரென்று ஆட்டோக்கள் வந்தவண்ணமும்,அதிலிருந்து ஆட்கள் இறங்கி ஓடிவந்த வண்ணமுமிருந்தனர்.லொறியின் முன்கண்ணாடியை யாரோ அடித்துநொருக்கியிருந்தனர்.பக்கவாட்டுக் கண்ணாடிகளும் உடைசலுற்றுத் தொங்கிக் கொண்டிருந்தன.

நல்ல வேளை மேலும் விபரீதங்கள் நடக்கமுன் பொலிஸ் வந்துவிட்டிருந்தது.சடலத்தைச் சுற்றிச் செங்கட்டியொன்றால் வரையப்பட்டிருந்தது.வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படச் சடலம் காத்திருந்தது.

இனி நான் என்ன செய்வேன்?எதுவுமே புரியவில்லை.வந்திருக்கும் பொலிஸிடம் விடயத்தைச் சொல்லிவிடலாமா?வேண்டாம்.அவர்களிலொருவரேனும் ப்ரேமாவின் ஊர்க்காரராக இருக்கும் பட்சத்தில் கடமையை விட இழப்பே மேலோங்கியிருக்கும்.என்ன வேண்டுமானாலும் நடக்கச் சாத்தியங்களுண்டு.

வந்து நின்ற ஆட்டோவொன்றிலிருந்து அது நிறுத்தப்படமுன்னமே குதித்து இறங்கி,ஒடிவந்தான் சுனில்.பிரேமாவின் கணவன்.ஏற்கெனவே அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சனம் அடங்காத் துயரத்தோடு ஓடிவரும் சுனிலை சடலத்தின் மேல் விழாமல் காத்துக் கொண்டது.கதறிக் கதறி சத்தமிட்டு அழுதான்.தென்னை மரம் ஏறிக் கொண்டிருந்தவனுக்கு விஷயத்தைச் சொல்லிக் கூட்டிவந்திருந்தனர்.உழைத்துக் கருத்த தேகத்தில் சட்டை இல்லை.

"பிள்ளைகள் ரெண்டும் ஸ்கூலிலிருந்து வந்துகேட்டால் நான் என்னடி சொல்வேன்? என்னடி நடந்துச்சு உனக்கு?"

அவனது ஓலம் வந்திருந்தவர்களை உசுப்பிவிட்டதில் அவனது ஊர் இளைஞர்களும் எனது ஊர் இளைஞர்களோடு சேர்ந்து சாரதியைத் தேடத்தொடங்கினர்.குற்றவாளியை நான் தான் ஒளித்துவைத்திருக்கிறேன் எனத் தெரிந்தால் நாளை இதே ஒற்றுமை இனக்கலவரமாக மாறச் சாத்தியமிருக்கிறது.

யோசிக்க நேரமில்லை.பொலிஸார் விபத்தினை நேரில் கண்ட,முதலில் கண்ட சாட்சியங்களைத் தேடித் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க நான் வீடுவந்து கதவு தட்டினேன்.அம்மா உடனே திறந்தார்.

"பாவம் அவள்.முந்தா நாள்தான் வந்து மாவிடிச்சிக் கொடுத்துட்டுப் போனாள்.இந்த வருஷம் அவ மகன் அஞ்சாம் ஆண்டுச் சோதனை எழுதுறானாம்.நல்லாப் பாஸாகினா வேறொரு பெரிய ஸ்கூல்ல சேர்க்கோணும்,அதுக்கு மாசம் மாசம் காசு சேர்க்குறேண்டு சொல்லிக் கொண்டிருந்தா "

அம்மா தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருந்த எதையும் காதில் வாங்காமல் கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு அவனிருந்த அறைக்குப் போனேன்.அம்மா தேநீர் ஊற்றிக் கொடுத்திருந்தார்.இன்னும் அழுது கொண்டிருந்தவனை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்வழியால் கராஜுக்கு வந்தேன்.சீக்கிரமாகக் காரின் பின்கதவு திறந்து உள்ளே சீட்டோடு ஒட்டி நிலத்தில் படுத்துக் கொள்ளச் சொன்னேன்.அம்மாவைக் கைகூப்பி வணங்கி நன்றி சொல்லிவிட்டு உயர்ந்த உடலை மிகச் சிரமத்தோடு முழங்காலை மடக்கிக் குறுக்கி காரின் சீட் நிலத்தோடு ஒட்டிப் படுத்துக்கொண்டான்.

அம்மாவைப் பின்சீட்டில் ஏறி,அமர்ந்துகொள்ளச் சொன்னேன்.காரை மெதுவாக வீதிக்கு எடுத்தேன்.வீதியில் இன்னும் புதிது,புதிதாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர்.அனைவரது முகங்களும் புதுவிதமான அனுபவமொன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.நல்ல வேளை யாரும் காருக்குள் எட்டிப்பார்க்கவோ,குசலம் விசாரிக்கவோ இல்லை.

காரை முன்வீதி வழியாக எடுத்து பொலிஸ்நிலையம் நோக்கிச் செலுத்தினேன்.ஏதோ தவறு செய்தவனைப் போல எனது நெஞ்சம் படபடத்துக்கொண்டிருந்தது.வீதியில் எதிர்நோக்கும் விழிகளெல்லாம் 'நீயெல்லாம் ஒரு வைத்தியனா?' எனக் கேட்பதைப் போல இருந்தது.

பொலிஸ் நிலைய முற்றத்தில் காரை நிறுத்தி,அம்மாவையும்,அவனையும் வாகனத்துக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு நேராக இன்ஸ்பெக்டரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.விபத்தை அவர் அறிந்திருந்தார்.ஸ்டேஷனிலிருந்து ஆட்கள் போயிருந்தனர்.வந்த விஷயத்தை அவரிடம் சொன்னதும் நன்றி சொன்னார்.எங்கேயோ தப்பித்து ஓடித் தேடவைத்துத் தமக்குத் தலைவலி கொடுக்க இருந்தவனைக் கூட்டிக் கொண்டுவந்து ஒப்படைத்தமை பெரிய சேவை எனச் சொல்லி அவனை அழைத்துவரச் சொன்னார்.

அம்மாவைக் காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு அவனை உள்ளே அழைத்துக் கொண்டுபோனேன்.அழுதபடியே வந்தவனை அங்கு முறைப்பாடு கொடுக்கவந்தவர்கள்,பொலிஸ்காரர்கள் வினோதமாகப் பார்த்தனர்.இன்ஸ்பெக்டர் விபத்து நின்ற இடத்திலிருந்த பொலிஸாருக்கு எனது பெயர் சொல்லி,நான் குற்றவாளியைக் கூட்டிவந்து ஒப்படைத்ததைச் சொல்லி மேலும் தேட வேண்டாமெனக் கட்டளையிட்டார்.

அவனிடம் வாக்குமூலம் கேட்டு,எழுதி அதில் ஒப்பமிடச் சொல்லிவாங்கி,அவனை அங்கேயிருந்த ரிமாண்டில் அடைத்தார்கள்.அவன் என்னை நோக்கி ''மிகவும் நன்றி ஐயா.ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்கமாட்டேன் இந்த உதவியை'' என்றான்.அவன் உடல் இன்னும் நடுங்கியபடியே இருந்தது.

இனிப் பிரச்சினையெல்லாம் எனக்குத்தான்.எனக்கு மட்டுமே தான்.எனது ஊருக்கும்,அவளது ஊருக்கும் எப்படி முகம் கொடுக்கப் போகிறேன்?ஒரு வைத்தியனாக இருந்துகொண்டு,ஊர்மக்களின் நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டு ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது மன்னிக்க முடியாக் குற்றம்தானே?

வாசலில் ஒப்பாரியுடனான அழுகைச் சத்தம் கேட்டது.பிரேமாவின் கணவனை பொலிஸார் அழைத்துவந்திருந்தனர்.அவனுடன் இன்னும் சிலபேர்.சுனிலிடம் அவன் இறந்துபோன மனைவி பற்றிக்
கேட்டு எழுதிக் கொண்டனர்.குற்றவாளியைக் காட்டினர்.குற்றவாளி இருந்த ரிமாண்ட் அருகிலேயே நின்று கொண்டிருந்த என்னைக் கண்டதும் சுனில் அழுகையை நிறுத்தி ஓடோடிவந்தான்.

திட்டப்போகிறானா? சட்டையைப் பிடித்திழுத்துச் சண்டை போடப்போகிறானா? அவனுக்கு இப்பொழுது எனது சட்டையைப் பிடித்திழுத்துக் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது.இறந்தவள் அவன் மனைவி.அவளது இறப்புக்குக் காரணமானவனுக்கு நான் அடைக்கலம் கொடுத்திருக்கிறேன்.

"நல்லவேலை செஞ்சீங்க ஐயா.என் பொண்டாட்டிய முட்டிட்டு தப்பியோடியவனை எப்படியோ பொலிஸில் பிடிச்சுக் கொடுத்துட்டீங்க.நீங்க இல்லன்னா இவனை நாங்க எங்க போய்த் தேடியிருப்போம்? நாங்க ஏழைங்க ஐயா.இந்தப் பொலிஸும் கொஞ்சநாள் தேடிப் பார்த்துட்டு கேஸை மூடியிருக்கும்.ரொம்ப நன்றி ஐயா "

கைகூப்பி என்னை வணங்கிய அவனது கரங்களை எனது விரல்களுக்குள் அடக்கிக் கொண்டேன்.தோள் தொட்டு அணைத்துக் கொண்டேன்.குற்றவாளியைக் காட்டியதும் உள்ளிருந்த அவன் தான் தெரியாமல் செய்துவிட்டதாகவும்,தன்னை மன்னித்து விடும்படியும் சுனிலிடம் வேண்டிக்கொண்டான்.

இனி அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு வைத்தியசாலைக்குப் போகவேண்டும்.இவர்களுக்குச் சீக்கிரமாகச் சடலத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.காருக்கு வந்து அம்மாவிடம் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதாகச் சொல்லி ஏறிக் காரை இயக்கினேன்.
அம்மா அழுதிருந்தார்.விழிகள் ரெண்டும் சிவத்திருந்தன.ஏனென்று கேட்டேன்.

"உன் அப்பாவும் ஒரு ட்ரைவரா இருந்தவர்டா" என்றார்.

வீடு வந்து பார்த்தபோது வீடு திருடுபோயிருந்தது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.